1

அந்த ஊருக்குப் புதிதாக வந்த ஒருவர், பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த பையனைப் பார்த்து தம்பி! உங்கள் ஊரில் பெரியவர்கள் யாரும் பிறந்திருக்கிறார்களா? என்று கேட்டார். அவரை நிமிர்ந்து பார்த்த பையன், எங்கள் ஊரில் பெரியவர்களாக யாரும் பிறப்பதில்லை. எல்லோரும் குழந்தைகளாகத்தான் பிறக்கிறார்கள் என்று பதில் சொன்னான்.

உண்மைதான். பிறக்கும் போது எல்லோரும் குழந்தைகள்தான். பலர் உடலால் மட்டும் பெரியவர்கள் ஆவார்கள். சிலர் மட்டும் உள்ளத்தால் பெரியவர்கள் ஆவார்கள்.

இறைவன் வானத்திலிருந்து பூமிக்கு அவ்வப்போது சில கடிதங்கள் எழுதுவான். அத்தகைய கடிதங்கள் பல செய்திகளைத் தாங்கி வரும். அந்தக் கடிதங்களே பூமியில் மகான்களாக அவதரிக்கின்றன.

அப்படியொரு கடிதம் தமிழகத்தில் விருதுபட்டி என்ற ஊருக்கு 1903ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி அனுப்பப்பட்டது. குமாரசாமி நாடார், சிவகாமி அம்மையார் என்ற தம்பதிகள் அந்தக் கடிதத்தை பத்திரமாக டெலிவரி செய்தார்கள். அந்தக் கடிதத்திலும் சிறப்பான செய்திகள் பல இருக்கின்றன என்ற தகவல் போகப்போக எல்லோருக்கும் புரிந்தது.

கழுத்தில் ஒரு கயிறு, கையில் காப்பு, குடுமி இத்தகைய தோற்றத்தில் காட்சியளித்த காமாட்சி ராஜா என்ற சிறுவன் எதிர்காலத்தில் காமராஜர் என்ற பெருந்தலைவராக உருவாகப் போகிறான் என்பதற்கான அடையாளம் அப்போதே தெரிந்தது.

விருதுபட்டியில் திருடன் ஒருவன் தனது கைவரிசையைக் காட்டிக் கொண்டிருந்தான். எல்லோருக்கும் குலை நடுக்கம். பெரியவர்கள் கூட பயந்து நடுங்கினார்கள். இருட்டத் தொடங்கியதுமே பலர் தங்களுடைய வீடுகளைப் பூட்டிக்கொண்டார்கள். திருடனைப் பிடிப்பதற்குப் பதிலாக தங்களைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே பலர் கவனம் செலுத்தினார்கள். தவறுகளைத்தட்டிக் கேட்க வேண்டும் என்ற தைரியம், அதனால் ஆபத்து வந்தால் ஏற்றுக்கொள்கிற அஞ்சாநெஞ்சம் சமுதாயத்துக்கு நாம் பயன்பட வேண்டும் என்ற தொண்டுள்ளம் இவையெல்லாம் சிறுவனாக இருந்த காமராசரிடம் நிரம்பியிருந்தது. அதனால் திருடனைப் பிடிக்க அவரே திட்டமிட்டார். தனக்கு உதவியாக சில நண்பர்களைச் சேர்த்துக் கொண்டார். திருடன் வரும் இருட்டு வழியில் குறுக்காக ஒரு கயிரைக் கட்டி வைத்தார்கள். அவன் விழுந்ததும் கண்ணில் தூவ மிளகாய்ப் பொடி தயாராக இருந்தது. பாதையின் ஓரத்தில் பதுங்கியிருந்து திருடன் வரும் நேரத்தை எதிர்பார்த்திருந்தார்கள். திட்டமிட்டபடி திருடன் வந்தான். கயிறு தடுக்கி தடுமாறி விழுந்தான். கணநேரத்தில் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவப்பட்டது. சாக்குப்பையில் போட்டு குண்டுக்கட்டாகக் கட்டிவிட்டார்கள். திருடனைப் பிடித்த சிறுவனின் தீரச் செயல் கண்டு ஊரே வியந்தது.

இத்தகைய திருடர்கள் எந்தத்துறையிலும் ஊடுருவாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book