10

பல்பொருள் அங்காடி வைத்திருந்த ஒருவர் மதியச் சாப்பாட்டிற்கு வீட்டிற்குச்செல்ல நினைத்தார். அப்போதுதான் பள்ளியிலிருந்து வந்த தன் மகனைக் கடையில் உட்கார வைத்தார். போகும் முன் கடையிலுள்ள சில பொருட்களின் விலையை மேலோட்டமாகச்சொல்லி விட்டுச் சென்றார்.

அவர் சென்ற பிறகு கடைக்கு வந்த ஒருவர் ஒரு டஜன் பேனாக்கள் உள்ள ஒரு அட்டைப் பெட்டியை எடுத்து இது என்ன விலை என்று கேட்டார். பையன், ஐந்து ரூபாய், என்றான். வந்தவருக்கோ ஆச்சரியம். இந்தக் கடையில் இவ்வளவு மலிவாக இருக்கிறதே ஒரு டஜன் 5 ரூபாயா பரவாயில்லை, என்று நினைத்து வாங்கிக் கொண்டு போய்விட்டார்.

சிறிது நேரத்தில் வீட்டுக்குச்சென்ற கடைக்காரர் திரும்பி வந்தார். ஏதாவது விற்றாயா என்று கேட்டார். உடனே பையன் ஆமாப்பா ஐந்து ரூபாய்க்கு பேனாக்கள் உள்ள அட்டைப் பெட்டியை விற்றேன் என்றான். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. ஒரு பேனா ஐந்து ரூபாய் என்று சொன்னேன். நீ ஒரு டஜன் பேனாக்களை ஐந்து ரூபாய்க்குக் கொடுத்திருக்கிறாயே என்று திட்டினார். பையன் அழத் தொடங்கினான். அப்போது அவர் என்ன சொன்னார் தெரியுமா, அப்படி விற்றதிலும் நமக்கு ஐம்பது பைசா லாபம் இருக்கிறது பேராசை கொண்ட வியாபாரிகள் இப்படி நடந்து கொள்வார்கள். ஆனால் பெருந்தலைவர் கதையோ வேறு.

இரவு எட்டு மணி நாட்டாமைக்காரர் ஜவுளிக்கடையில் காமராஜ் தனி ஆளாக இருந்தார். அப்போது அம்மணி அம்மாள் எனும் கீரை விற்கும்பெண், மகள் தமயந்திக்குப் பாவாடை தைக்கத் துணி வாங்கினார். சீட்டித் துணி பூப்போட்டது. ஐந்து ரூபாய் நோட்டைக் கொடுத்து மீதிச் சில்லரை வாங்கிக் கொண்டு தெற்கு ரத வீதி நோக்கிச் சென்றார்.

திடீரெனப் பின்னால் யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டுத் திரும்பிய அம்மணி அம்மாள் காமராசைப்பார்த்ததும் ஏன் தம்பி இப்படி ஓடி வந்தே? என்று கேட்டார். அதற்கு காமராசர், ஓர் அணாவைக் கடையிலே கீழே போட்டுட்டு வந்துட்டீங்க. அதைக்கொடுக்கத்தான் ஓடியாந்தேன் என்று கூறி ஓர் அணாவை நீட்டினார்.

அம்மணி அம்மாள் வியந்து மகிழ்ந்து சங்கலி கருப்பசாமி! ராசாவுக்கு நீ என்னைக்கும் துணை இருக்கணும்! என்று கைகூப்பி வணங்கினார்.

மறுநாள் ஒரு கூடை நிறையக் கொடுக்காப்புளி பழம்கொண்டு வந்து காமராசர் வீட்டில் சேர்த்து விட்ட அம்மணி அம்மாள் நடந்த விஷயத்தையும், காமராசரின் நேர்மையையும் எடுத்துச்சொன்னார். பாட்டியும் அன்னையும் பூரிப்புக் கொண்டார்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book