100

காமராசரின் அரிய சேவையைக் கண்டு மகிழ்ந்த பேரறிஞர் அண்ணா, “காமராசர் கல்லூரியில் படிக்கவில்லையே தவிர வாழ்க்கைப் பாடத்தை நன்றாகப் படித்தவர். மக்களின் புன்னகையை, பெரு மூச்சை, கண்ணீரைப் படித்து அவர் பட்டம் பெற்றார். முப்பது ஆண்டு நாற்பது ஆண்டு தொண்டாற்றினால் தான் இந்தப் பாடத்தைப் பெற முடியும். காமராசர் தன்னுடைய பணிகள் மூலம் நாட்டின் தரத்தை உயர்த்த முயன்றார். தமிழர்களுக்கு நற்பணியாற்றினார். தமிழர்கள் பெருமைப்படத்தக்க பல நல்ல காரியங்களைச் செய்தார்என்று பாராட்டிக் கூறியுள்ளார்.

சாமானிய மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு காமராசர் திட்டங்கள் தீட்டினார்என்று காமராசர் பற்றி கலைஞர் கருணாநிதி புகழாரம் சூட்டினார். மேலும்

“1951-ல் தமிழகத்தில் ஒரு புரட்சி நடந்தது. இட ஒதுக்கீட்டுக்கு வேட்டு வைக்க முயற்சித்தனர். பிற்பட்டவர்கள் முன்னேற உச்சநீதிமன்றமே இடையூறாக இருந்தபோது பெரியாரும் அண்ணாவும் களம் புகுந்தனர். அதற்கு ஆதரவாக காங்கிரசில் இருந்தும் குரல் ஒலித்தது.

கே.டி.கோசல்ராம், சாமி நாதன் போன்றவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதைவிட வீரமிக்க, வல்லமை மிக்க ஒரு குரல் வந்தது. அந்தக் குரல் நேருஜியைச் சந்தித்து அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரியது. அந்தக் குரல்தான் காமராசரின் குரல்

மேலும் கலைஞர் கூறுகையில் நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். காமராசர் மொழிப் பிரச்சினையில் உறுதியாக இருந்தார். சட்டப்பேரவையில் அறிஞர் அண்ணா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நேரம். முதல் வரிசையில் அண்ணாவும் அவருக்குப் பின்னால் நானும் இருந்தோம். விவாதம் நடந்து கொண்டிருந்தது.

கம்யூனிஸ்டு தலைவர் கல்யாண சுந்தரம் கல்லூரிப் படிப்பில் இருந்து ஆங்கிலத்தை அகற்ற வேண்டும்என்று பேசிய உடனே அண்ணாவைப் பார்த்து பக்கத்தில் வருமாறு சைகை காட்டினார். இருவரும் இடையே ஒரு பலகையில் கைகளை வைத்துக் கொண்டு முகத்தோடு முகம் அருகருகே வைத்து எதையோ பேசினார்கள். காமராசர் என்னையும் அழைத்தார்.

என்ன தமிழ், தமிழ் என்கிறார். நான் தமிழுக்கு விரோதியா? ஆங்கிலத்தை அகற்றி விட்டால் என்ன ஆகும். அந்த இடத்தில் இந்தி வந்து குந்திக்கும்னேன்என்றார் காமராசர்.

அண்ணா இதைக்கேட்டுப் புன்னகைத்தார். கூட்டம் முடிந்து வழக்கம் போல நானும் அண்ணாவும் ஒரே காரில் புறப்பட்டுச்சென்றோம். முன் இருக்கையில் அமர்ந்திருந்த அண்ணா என்னை நோக்கி எவ்வளவு பெரிய பிரச்சனை, ஒரே வார்த்தையில் எப்படி பதில் சொன்னார் பார்த்தாயா?.” என்று கேட்டார்.

இந்தி திணிக்கப்படக்கூடாது என்பதில் அவ்வளவு உறுதியாக இருந்து காமராசர் திராவிடக்கொடியைப் பிடிக்காமலேயே தமிழ்மொழிக்காகப் போராடினார். இந்தியாவில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதில் காமராசர் உணர்வு பூர்வமான கருத்து கொண்டிருந்தார். அதனால் தான் நெருக்கடி நிலையின் போது துடித்தார். உடல் நலம்குன்றிப் படுத்தார் என்கிறார் கலைஞர்.

திருத்தணியில் நடந்த கூட்டத்தில், “தேசம் போச்சு, தேசம் போச்சு” – என்றார். அவர் மிகப்பெரிய ஜனநாயகவாதி. கலைஞர், “சாமானியர்களின் காவலர்” – என்று தன் உரையில் கூறினார்.

முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் பெருந்தலைவர் காமராசின் மகத்தான இயல்புகள் பற்றிக் கூறும்போது, “போராடி, போராடி வாழ்க்கையில் எதிர்நீச்சல்போட்டுக்கொண்டு தன்னை உயர்த்திக் காட்டியவர் காமராசர். இன்றைக்கு நான் பல கோப்புகளைப் பார்க்கிறேன். பார்க்கும்போது காமராசர் முதல்வராய் இருந்த காலத்தில் வீணாகச் சட்ட பிரச்சினையை வைத்து அவர் செய்ய வேண்டிய காரியங்களைத்தள்ளிப்போட்டதில்லை. மக்களுக்காகச் சட்டமே ஒழிய சட்டத்திற்காக மக்கள் அல்ல என்பதைச் செயலில் காட்டினார். ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட அழுத்தப்பட்ட தூக்கி எறியப்பட்ட மக்களின் உள்ளத்திலே உறுதியும், வீரமும், துணிவும் அறிவும் வரச் செயல்பட்டவர் காமராசர்என்றார்.

முதல்வர் ஜெயலலிதா கூறும்போது படிக்காத மேதை என்றும் கர்மவீரர் என்றும் தமிழ்நாட்டு மக்கள் போற்றிப் பாராட்டும் பெருந்தலைவர் காமராசர் மக்களுக்காகவே சட்டம் மக்களுக்காகவே திட்டம் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு புதிய சட்டங்களையும் புதிய திட்டங்களையும் வகுத்து செயல்பட்டவர்என்றார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book