103

தமிழகத்தின் தேசியக் கவிஞராக தன் கவியின் கனவு நாடகத்தின் மூலம் மிகுபுகழ் பெற்றிருந்த திரு.எஸ்.டி.சுந்தரம் அவர்களுக்கு இதயத்திலே அமைதியில்லை. தமிழ் நாட்டை ஒரு ராக்கெட் வேகத்தில் முன்னேற்ற முடிவெடுத்து, அல்லும் பகலும் அதைப் பற்றியே சிந்தித்துச் செயலாற்றி இந்தியாவிலேயே அனைத்து மாநிலங்களையும் ஒப்பீடு செய்து பார்க்கையில் இரண்டாமிடத்துக்குக் கொண்டுவந்து விட்ட நிலையிலும் பொதுத் தேர்தல்களில் எதிர்க்கட்சியாக வெறும் மேடை முழக்கவாதிகளாகயிருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தன் ஆதரவு வாக்காளர் விகிதத்தை உயர்த்திக் கொண்டே வருவது ஒரு புரியாத புதிராகவே அக்கவிஞர் மனதை உறுத்தியது.

நீள நினைந்த அக்கவிஞருக்கு இதற்கு விடையாகத் தோன்றியதெல்லாம் காமராஜர் அரசு தன் சாதனைகளைப் பாமர மக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லாமையே என்பதுதான். அக்காலக் கட்டத்தில் இந்தியாவிலே மிக அதிகமான சினிமா என்னும் திரையரங்குகளை உடைய மாநிலமாக இருந்தது தமிழ்நாடே என்பதை உணர்ந்தார். திரையரங்கு எண்ணிக்கை வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியை எட்டிவிட்ட ஒரு நாட்டின் மேலுமொரு வளர்ச்சியே என்று நிபுணர்கள் கூறினாலுங்கூடத் திரையுலக வளர்ச்சியில் பெரும் பங்கைத் திராவிட முன்னேற்ற கழகத்தினரே கையகப்படுத்தி இருப்பதையும் உணர்ந்தார். எனவே அச்சாதனத்தைக் காங்கிரஸ் இயக்கமும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று மிகத்தீர்க்கமான முடிவுக்கு வந்தார்.

அந்த எண்ணத்தை நெஞ்சிலே ஏந்தித் தலைவர் காமராஜரைச் சென்று கண்டார்.

ஜயா! நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக எண்ணற்ற சாதனைகளை நீங்களும் உங்கள் நல்லாட்சியும் செய்திருந்தாலும் நமக்குக் கிட்ட வேண்டிய மக்களாதரவு எதிர்க்கட்சிக்கே செல்வதைப் பார்க்கும் போது நாம் நமது சாதனைகளைப் பாமரமக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்வதில் சற்றே பின் தங்கியே இருக்கிறோம் என்று நினைக்கிறேன் என்றார் கவிஞர்.

அவர் கூற்றைக் கூர்ந்து கேட்ட காமராசர், அப்படியா?…சரி, அதற்கென்ன செய்யலாம்னு நினைக்கிறீங்க? என்று அவரிடமே யோசனை கேட்டார். உடனே கவிஞர், ஐயா! திரைப்படங்கள் மிக வலிமை மிக்க சாதனங்கள். நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் நாட்டு நடப்புகளைக் கொண்டு செல்வது அவைகள் தான். இதை நாமும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நமது ஆட்சியின் சாதனைகளையெல்லாம் தொகுத்து ஒரு செய்திப்படம் (டாகுமென்டரி) ஒன்றைத் தயாரித்து வெளியிட்டால் எல்லாத் தரப்பு மக்களையும் அவை சென்றடையும் என்றார்.

நாம்ப மக்களுக்காகச் செய்கிற காரியங்களை நாம்பளே விளம்பரப்படுத்தனுமா?… சரி, இதுக்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டார் காமராசர்.

சுமாரா ஒரு மூன்று லட்சம் ரூபா இருந்தா எடுத்துடலாம்னு நினைக்கிறேன் ஐயா என்று கவிஞர் கூற துடித்துப்போன காமராஜர்,

அப்பாமூணுலட்சமா? மக்கள் தந்த வரிப்பணத்தில் நமக்கு விளம்பரமா? அந்த மூன்று லட்ச ரூபாய் இருந்தா நான் இன்னும் மூணு பள்ளிக் கூடத்தைத் திறந்திடுவேனேவேண்டாம்படமெல்லாம் எடுத்துக் காட்ட வேண்டாம் என்று சொல்லிக் கவிஞரை அனுப்பிவிட்டார்.

இன்றைய அரசியல்வாதிகள் தாங்கள் திறக்கும் பாலங்களுக்குக் கூட எல்லா நாளேடுகளிலும் முழுப்பக்க விளம்பரம் செய்து பல லட்சங்களில் விழா எடுக்கிறார்கள். எல்லாம் ஏழையழுது தந்த கண்ணீரான வரிப்பணத்தில். ஆனால் இவர்களிலிருந்து முற்றும் மாறுபட்ட தலைவராக விளங்கினார் காமராசர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book