105

இன்றைய உலகில் மிகப்பழமையான நகரங்கள் என ஒரு பட்டியல் தயாரிப்பதானால் அதில் பாபிலோன், ஏதென்ஸ், ஜெருசலம், அலெக்சாண்டிரியா, வாரனாசி, காஞ்சிபுரம், பாடலிபுத்திரம் (பாட்னா), உரோமாபுரி, பீகிங், இந்திரப் பிரஸ்தம் (பழைய டெல்லியின் ஒரு பகுதி) என்று பட்டியலிடலாம்.

அழகிய நகரங்கள் என்று பட்டியிலிருவதானால் இதற்குப் போட்டி அதிகம். இலண்டன், பாரிஸ், ஆம்ஸ்டர்டாம், நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், ரியோடிஜனிரோ, பியூனஸ் அயர்ஸ், பெர்லின், வியன்னா, நேப்பில்ஸ், வெனிஸ், சிட்னி, மெர்ல்போர்ன், டோக்கியோ, மணிலா, சிங்கப்பூர், ஹாங்காங், பாங்காக், மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க், ஷாங்காய், சியோல், வாஷிங்டன், மும்பை என்று பட்டியல் நீளும்.

சில நகரங்கள் தான் பெருக்க வேண்டிய அளவைத் தாண்டியவுடன் துணை நகரங்களுக்கு வழியமைத்து இரட்டை நகரங்களென்று பெயர் பெற்று விளங்கும். இந்தியாவில் பழைய டெல்லிபுதுடெல்லி, ஹைதராபாத்சிக்கந்தராபாத், திருநெல்வேலிபாளையங்கோட்டை, வடஅமெரிக்காவில் மினியோபோலிஸ்செயிண்ட் பால், கல்கத்தாஹூப்ளி போன்ற நகர்களைக் குறிப்பிடலாம்.

அண்மைக் காலத்தில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகர்களில் இஸ்ரேலின் டெல்அவீவ், அமெரிக்காவில் ஹூஸ்டன் (டெக்ஸாஸ்), இந்தியாவில் சண்டீகர், ஐரோப்பாவில் ராட்டர் டாம் (ஹாலந்து) போன்ற நகரங்கள் அப்படிப்பட்டவை.

சென்னை நகரம் என்ற மெட்ராஸ் திட்டமில்லாது வளர்ந்த நகரம். முதலில் வந்த போர்த்துக்கீசியர்கள் சான்தோம் என்ற சிற்றூரை அமைத்தனர். பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் சாந்தோமுக்கு வடக்கே சென்னைப் பட்டணம் என்ற மதராசில் ஜார்ஜ் கோட்டையைக் கட்டி அதனுள் தங்கள் குடியிருப்பை அமைத்துக் கொண்டு தங்களின் சேவைபுரிவோருக்காகத் தங்குமிடங்களை முத்தியால் பேட்டை, பெத்தநாயக்கன் பேட்டை, இராயபுரம், வண்ணாரப்பேட்டை, சின்னதரிப் பேட்டை (சிந்தாதிரிப் பேட்டை) வேப்பேரி போன்ற பகுதிகளை உருவாக்கினர். இவர்களின் வருகைக்கு முன்னரே வந்த ஆர்மீனியர்கள் வசித்த தெருதான் இன்றைய அரண்மனைக்காரத் தெரு.

ஆனால் 1739-ல் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை அமைக்கப்பட்டதற்கு முன்னரே மயிலாப்பூர், திருஅல்லிக்கேணி, திருவான்மியூர், சேத்துப்பட்டு, திருஒற்றியூர் போன்ற அழகிய சிற்றூர்கள் கால எல்லை காட்டமுடியாப் பழமையோடு இலங்கிவந்தன.

சென்னை நகரின் வேகமான வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியா நிலையில் மக்கட் பெருக்கம் வளரவே ஒரு கட்டுத்திட்டமில்லா நிலையில் சென்னை நகரம் பென்னம் பெரிய நகராக உருவெடுத்தது. துறைமுகம் அமைத்து ஆழப்படுத்தப்பட்ட போது தெற்கே அழகிய மெரினாக் கடற்கரை உருவெடுத்தது.

1940ஆம் ஆண்டைய சென்னை நகரின் மக்கள் தொகை ஏழுலட்சங்கள். காமராசர் ஆட்சியின் போது அது மும்மடங்காக விரிந்தது. நகர அபிவிருத்திக் கழகம் (C.I.T.) அமைக்கப்பட்டுப் புதிய குடியிருப்புப் பகுதிகள் தோன்றிய வண்ணமிருந்தன. அமைந்தகரை ஷெனாய் நகர், அடையாற்று காந்தி நகர், கஸ்தூரிபாய் நகர், நந்தனம் சி..டி. நகர்கள் அப்படித் தோன்றியவையே.

இதேபோல மதுரை, திருச்சி, கோவை, சேலம் போன்ற நகர்களும் விரியத் தொடங்கின.

பெருநகரங்களின் சுற்றுப்புறங்களில் பரப்பிற் பெரிதான அரசு இடங்கள் பரந்து பிரிந்து கிடந்தன.

அந்த நேரத்தில்தான் நேருஜியவர்கள் மாநில அரசுகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். வேகமாக மாறிவரும் நாட்டின் தொழிற்பெருக்கத்துக்கேற்ப பெருநகரங்களின் சுற்றுப்புற காலி இடங்களை மாநில அரசுகள் கையகப்படுத்தி வைக்க வேண்டும் என்பது தான் அவ்வேண்டுகோள்.

ஆனால் மாநில அரசுகள் இதில் கவனம் செலுத்துவதற்கு முன்னரே பல தனியார்கள் இதில் முந்திக் கொண்டனர்.

அதேபோல ஏழை மக்கள் சென்னை நகருக்குக் குடிபெயர்ந்து பல சேரிகளை அமைத்து வாழத் தொடங்கிவிட்டனர்.

சென்னை நகரின் புறநகர்ப்பகுதியில் குட்டி நகரங்களை மேலை நாட்டுப் பாணியில் திட்டமிட்டு அமைக்க நகர அபிவிருத்திக் கழக அதிகாரிகள் திட்டமிட்டனர். ஒரு குழுவினர் மேலைநாடுகள் சென்று அவர்கள் புதிதாகத்திட்டமிட்டுக் கட்டிய நகரங்களை நேரிலே பார்த்து வடிவமைப்புப் படங்கள் தயாரித்து வந்து அதைத்தமிழகத்தில் செயற்படுத்தக் கூடிப்பேசினர். துறை சார்ந்த அமைச்சரையும் நேரில் சந்தித்துக் கோப்பில் ஒப்புதலும் பெற்றுவிட்டனர்.

இனி முதலமைச்சரின் பார்வைக்கு அனுப்பி அவர் ஒப்புதல் பெற்றுவிட்டால் அரசுப் பணத்தில் விமானத்தில் பறக்க வேண்டியது தான் பாக்கி.

காமராசர் 1954 ஏப்ரல் 13 ஆம் நாள் பொறுப்பேற்ற போது நாட்டின் நடுநிலை ஆங்கில நாளேடான ஹிந்து காமராசரின் பரந்த கட்சி அனுபவத்தைப் புகழ்ந்து எழுதியதே தவிர அரசை நடத்தும் விவகாரத்தில் ராஜாஜியின் ஆற்றலை இவரிடம் எதிர் பார்க்க முடியாது என்பது போல எழுதியிருந்தது.

(It will be a no easy thing to succeed him (Rajaji). Mr.Kamaraj Nadar is a seasoned Politician with a shrewd sense of his own limitations, who has so far preferred influence to power. He has no experiences of ministerial office. It is of course Mr.Nadar
himself to determine whether these might not be handicaps if it should be decided that he should himself undertake the responsibilities of Chief Ministership) “Hindu”- 15-4-1954

காமராசரிடம் எந்தக் கோப்பைப் பரிந்துரைத்தவர்கள் அக்கால ஐ.சி.எஸ். என்ற உயரிய அரசுப் பணிப்பட்டத்தைப் பெற்றவர்கள், இலண்டனிலே படித்தவர்கள்.

அதே போல மேனாட்டுப் பயணத்துக்குத் தயார் நிலையிலேயிருந்த அதிகாரிகளும் காமராசர் நிச்சயம் இதில் கையெழுத்திட்டு விடுவார் என்றே நம்பினர். கோப்பை படித்து முடித்த காமராசர் ஒரு கணம் சிந்தித்தார்.

ஓர் ஊரைத் திட்டமிட்டு அமைத்த நிலை நம் இந்தியாவிலோ, தமிழ்நாட்டிலோ இல்லவே இல்லையா! இதில் கூட மேல் நாட்டுக்காரன்தானா நமக்கு வழிகாட்டி? இந்த அதிகாரிகள் சென்று பார்த்து வருவதாகச்சொல்லும் இடங்கள் நம் பண்பாட்டுக்கு ஒத்து வரக் கூடியவைதானா? நாமும் நாடு பூராவும் சுற்றி வந்திருக்கிறோமே. நம் மூதாதையர்கள் இந்த நகரமைப்புக்கலையில் நம்மைப் பிறநாட்டைப் பார்த்து, ஏங்க வைக்கவா செய்திருப்பார்கள்? மக்கள் ஒரு துட்டு, இரண்டு துட்டாகத் தந்த வரிப்பணத்தில் இந்த உலக உலா தேவைதானா? என்றெல்லாம் சிந்தித்தபோது அவர் மனத்தகத்தே மதுரை மாநகர் தோன்றியது.

ஊரின் மையத்தில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சுற்றிலும் தேரோடும் ரதவீதிகள், அடுத்த சுற்றில் அளவெடுத்து அமைத்தாற்போல நான்கு மாடவீதிகள், அதற்கடுத்து ஆவணி வீதிகள், இடையில் இவைகளை இணைக்கும் சாலைகள். அக்காலத்திலேயே எவ்வளவு தொலைநோக்கோடு நகரை அமைத்திருக்கிறார்கள் நம்முன்னோர். இந்த அமைப்புக்கு மேல் திட்டமிட என்ன இருக்கிறது? என்று சிந்தித்தவுடன் கோப்பிலே எழுதினார், இதற்காக மேலை நாட்டுப்பயணம் தேவையில்லை, எக்காலத்துக்கும் ஏற்றாற்போல அமைக்கப்பட்டிருக்கும் நம் மதுரை நகரைச் சென்று கண்டு ஆய்வு செய்து வாருங்கள் என்று குறிப்பெழுதிக் கையெழுத்திட்டு சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்பினார்.

தன் ஆற்றலுக்கு மீறிய முதலமைச்சர் பொறுப்பை ஏற்குமுன் திரு.காமராசர் நன்கு சிந்திப்பது நல்லது என்றெழுதிய ஹிந்து ஏட்டின் வாசகத்தைத் தான் ஆட்சிபுரிந்த ஒன்பது ஆண்டுகளின் ஒவ்வொரு நாளிலும் வென்று காட்டினார் காமராசர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book