22

இருவர் பேசிக்கொண்டிருந்தனர். ஒருவர் சொன்னார் வானவெளி ஆராய்ச்சியில் வேகம் போதவில்லை. சந்திர மண்டலத்துக்கும், செவ்வாய்மண்டலத்துக்கும் தான் ராக்கெட் அனுப்புகிறார்கள். அந்தத் துறைக்கு நான் தலைவரானால் புதுமை செய்து பரபரப்பை உண்டாக்குவேன்.

அப்படி என்ன செய்வீர்கள்?

சூரிய மண்டலத்துக்கே ராக்கெட் விட ஏற்பாடு செய்வேன்

சூரியனில் உஷ்ணம் அதிகம் ஆயிற்றே ராக்கெட் அங்கு சென்றால் எரிந்து விடும்

அது எனக்கு தெரியாதா? பகலில் ராக்கெட் அனுப்பினால் தானே பிரச்சினை இரவில் அனுப்ப ஏற்பாடு செய்வேன்

இப்படி அடிப்படையே தெரியாமல் பதவிக்கு வருபவர்கள் உண்டு.

ஆனால் எல்லா ஆற்றலும் இருந்தும் பதவியை துச்சமென நினைப்பவரும் உண்டு. பெருந்தலைவர் காமராசர் இரண்டாம் வகையைச்சேர்ந்தவர். இவரது அரசியல் பணி விரிவடைந்து விடுதலைப் போராட்டமானது. எண்ணற்ற போராட்டங்களை முன் நின்று நடத்தினார். தண்டனைகளையும் உறுதியோடு ஏற்றார். 1920-ல் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். 1923-இல் மதுரையில் கள்ளுக்கடை மறியலை வெற்றிகரமாக நடத்தினார். 1928-ல் சைமன் கமிஷன் குழுவை எதிர்த்துப் போராடினார். 1925-ல் கர்மவீரர் காமராசர் தானாக ஒரு தொண்டர் படையைத் திரட்டிக்கொண்டுபோய்ச் சென்னை வந்திருந்த காந்தியடிகளைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளைக்காரத்தலைவர் நீல் என்பவனின் சிலையை சென்னை மவுண்ட் ரோட்டிலிருந்து அகற்றும்போராட்டம் பற்றிய சந்திப்பு அது. காங்கிரஸ் மாநாட்டிலேயே அதுபற்றி தீர்மானம் நிறைவேற்றப்படும் அளவுக்கு அப்பச்சியின் போராட்டம் நாடு தழுவிய அளவில் பெயர் பெற்றிருந்தது. நீல் சிலை நீக்கப்பட்ட பின்னரே போராட்டம் ஓய்ந்தது. இப்படி போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே தேர்தலையும் சந்திக்கின்ற வாய்ப்புக் கிட்டியது. விருதுநகர் நகர சபைத் தேர்தலில் சிறையில் இருந்தபடியே வெற்றி வாகை சூடினார். நகர சபைத்தலைவர் பதவி வழங்கப்பட்ட போது அதை ஏற்க மறுத்தார். வெள்ளைக்காரன் காலத்து பதவி அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நண்பர்கள் விடாப்பிடியாக வற்புறுத்தினார்கள். அவர்களுக்காக ஆறு நிமிடங்கள் மட்டுமே அந்த நாற்காலியில் இருந்து விட்டு எழுந்துவிட்டார் காமராசர். இத்தகைய அரசியல் அற்புதங்கள் அவரது வாழ்நாளில் பல உண்டு.

வெறும் அரசியல்வாதி தேர்தலையே எண்ணுகிறான். அரசியல் ஞானியோ வரும் தலைமுறையை எண்ணுகிறான்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book