24

வேகமாகப் போய்க் கொண்டிருந்த ஒரு பேருந்து மரத்தின் மீது மோதி பலத்த விபத்துக்குள்ளானது. பேருந்தில் வந்த அனைவரும் சிதறி வெளியே விழுந்தனர். கையிலே அடி, கால்லே அடி, ஐயோ அம்மாங்கிற கூக்குரல் எல்லாப் பக்கமும். அந்த நேரத்துலே எல்லோரையும் மருத்துவ மனையைக் கண்டுபிடிச்சு சேர்க்கிறதுக்குப் பதிலா கண்டக்டர் அடிபட்டு விழுந்தே கிடக்கிற பயணிகளோட சட்டைப் பையிலே என்னவோ தேடிக்கிட்டிருந்தார். என்னன்னு கேட்டா? யாரோ ஒரு ஆள் டிக்கெட் வாங்கலை பஸ் கிளம்பின நேரத்திலே இருந்து பார்க்கிறேன். கணக்கு சரியா வரலைங்கிறார்.

அதுகூட பரவாயில்லை. கை ஒடிந்து விழுந்து கிடக்கிற ஒரு ஆள் எனக்கு மூணு ரூபா சில்லரை பாக்கி தரணும் மறந்துடாதீங்க அப்படிங்கிறார்.

இப்படி மனிதர்களே மனிதர்களை மதிக்காத சூழ்நிலையில் மனிதர்களை மட்டும் அல்ல மற்ற உயிரினங்களையும், சட்டத்தையும் மதித்து நடந்த மாபெரும்தலைவர் காமராசர்.

பெருந்தலைவர் பிறரிடம் அன்பு காட்டுகின்ற அதே நேரத்தில் பிறரிடம் காணும் குறைபாடுகளையும் கண்டிப்பார். ஒரு சமயம் வண்ணாரப் பேட்டையிலே கூட்டம் ஒன்றை முடித்துக்கொண்டு திரும்பிய போது சென்ட்ரல் அருகே கார் வலது புறம் திரும்ப முயன்றது.

உடனே பெருந்தலைவர் வழக்கமாகப் போவது போல அந்தக் கோடி வரை போய் வந்துதான் திரும்ப வேண்டும். இரவு நேரம் போக்குவரத்து இல்லை என்பதற்காக இப்படி குறுக்கே போய்ப் பழகினால் பகலிலும் அப்படித்தானே போகத் தோன்றும், நம்ம காரே இப்படிப் போனா மத்தவங்க என்ன நினைக்க மாட்டாங்க? அதனாலே நேராகப் போ என்று பொரிந்தார்.

ஒருநாள் காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு திரும்பிக்கொண்டிருந்த போது கார் திடீரென ஒரு குலுக்கலுடன் நின்றது. ஒளி வெள்ளத்தால் கண்கள் கூசின. காமராசர் கோபத்துடன், எதிரே வந்த லரியை நிறுத்தச் சொன்னார். எப்படி வெளிச்சத்தோடு வர்ரான். இரவு நேரம் எதிரே வரும் வாகனம் ஓட்டுபவருக்கு கண் கூசாது. இந்த விதி தெரியாமல் வருபவரை இனிமேல் இந்த அஜாக்கிரதையோடு வராமல் வண்டி ஓட்டுங்கள் என்று கண்டித்து அனுப்பினார்.

இதே போன்று ராயபுரம் கல் மண்டபம் வந்து கொண்டிருந்தார் பெருந்தலைவர். எதிரே ஒரு மாட்டு வண்டி வந்து கொண்டு இருந்தது. அதற்குப் பின்னால் வந்த லாரி மாட்டு வண்டியை முந்திச் செல்ல முயன்ற போது லாரி டிரைவர் பெரியதாக ஹாரன் அடித்துக்கொண்டிருந்தார். வண்டியோட்டி மாட்டை அடித்து விரட்டிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த தலைவர் காரை விட்டு இறங்கி வண்டியோட்டியிடம் ஏம்பா இறங்கு. மாடு எப்படி தவிக்குது பாரு என்றவர், லாரி டிரைவர் ஹாாரன் அடிப்பதைக் கண்டித்து, மாடு மிரளுது நீ ஓயாமல் ஹாரன் அடிக்கிறாயே என்று கூறினார்.

சாதாரண ஜீவன்கள் கூட துன்பப்படுவதைப் பொறுத்துக் கொள்ளாத பெருங்கருணை உடையவர் பெருந்தலைவர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book