31

ஒரு முறை தலைவர் தனது வீட்டின் முன்னறையில் அமர்ந்து வந்தவர்களோடு பேசிக்கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத நிலையில் பதினெட்டு வயது நிரம்பிய அழகிய சிவந்த நிறமுடைய இளைஞன் ஒருவன் உரிமையோடு தலைவரின் அருகில் வந்து நின்றான். அவனைப் பார்த்த தலைவர் அவனோடு உரையாடத் தொடங்கினார்.

என்னமா கனகவேல் என்ன விஷயம்? என்ன காகிதம்? என அவன் கையில் வைத்திருந்த காகிதத்தை கூர்ந்து படித்தார்.

தாத்தா எம்.பி.பி.எஸ்சுக்கு அப்ளிகேஷன் போட்டேன். இண்டர்வியூ நடந்திருச்சி. நீங்க ஒரு வார்த்தை சி.எம்.கிட்டே சொன்னீங்கன்னா நிச்சயம் இடம் கிடைக்கும். லிஸ்ட் போடறதுக்குள்ளே சொல்லுங்க தாத்தா. எங்க குடும்பத்துலே நான் ஒருத்தனாவது படிச்சு டாக்கடராயிடுவேன் தாத்தா என்ற இளைஞன் கெஞ்சினான். அந்த இளைஞன் பெருந்தலைவரின் ஒரே தங்கை திருமதி நாகம்மாளின் மகள் வழிப்பேரன்.

சரி. அப்ளிகேஷன்னிலே என் பேரை எதுக்கு எழுதினே என்று கேட்டார் தலைவர்.

இல்லை தாத்தா. என் மெட்ராஸ் அட்ரஸ் கேட்டிருந்தாங்க. எனக்கு உங்களைத் தவிர இங்கே யாரையும் தெரியாதே. இன்டர்வியூவிலும்கேட்டாங்க. நான் எங்க தாத்தான்னு சொன்னேன்.

உடனே தலைவர், கனகவேலு இந்த டாக்டர் படிப்பு என்சினியர் படிப்புக்கு எல்லாம் அரசாங்கம் ஒரு கமிட்டி போட்டிருக்கும். அவுங்க தேர்ந்தெடுக்கிறவங்களுக்குத்தான் இடம் கிடைக்கும். அதனாலே சிபாரிசு பண்றது சரியில்லை. நீ நல்லா பதில் சொல்லி இருந்தீன்னா உனக்குக் கிடைக்கும். கிடைக்கலைன்னா பேசாம கோயமுத்தூர்லே பி.எஸ்.சி. அக்ரிகல்ச்சர் பாடம் எடுத்துப் படி. அதுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும். என்னாலே சிபாரிசு பண்ண முடியாது என்று சொல்லி அவன் தந்த தாளையும் அவனிடம் கொடுத்து அனுப்பி விட்டார். அந்த வருடம் அவனுக்கு மருத்துவர் படிப்புக்கு அனுமதி கிடைக்கவில்லை.

நாம் போட்ட சட்டங்களை நாமே மீறுவது என்பது தலைவருக்கு ஏற்கமுடியாத செயல் என்பதோடு மற்றவர்கள் அவர் உறவுமுறையைச் சொல்லிப் பயன் பெற வந்தாலும் பொதுவாழ்வில் அவர் இந்த ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவராக இருந்தார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book