48

ஓர் ஊரில் ஒரு கட்சியின் தொண்டருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. அவர் கட்சிக்காகப் பல தியாகங்களைச்செய்திருந்தார். அவரது அறுபது வயது நிறைவையொட்டி விழா ஏற்பாடு செய்திருந்தார். கட்சியின் பெரிய தலைவர் பாராட்டுரை வழங்க வந்திருந்தார். அவர் பேசும்போது, இங்கே பாராட்டுப்பெறுகிறவர் எனக்கு மிக நெருக்கமான நண்பர். போராட்டங்களில் கலந்து கொண்டு ஜெயிலுக்குப்போனபோது நானும் இவரும் ஒரே அறையில் பல நாட்கள் இருந்திருக்கிறோம். பல விஷயங்களைக் கலந்து பேசியிருக்கிறோம். நான் இந்தப் பகுதிக்கு வரும்போதெல்லாம் இவரைச் சந்திக்காமல் சென்றதில்லை. இவரது வீட்டுக்குக் கூட சென்று விருந்து உண்டிருக்கிறேன். நானும் இவரும் அவ்வளவு நெருக்கம். கடிதத் தொடர்பு கூட அடிக்கடி உண்டு என்று அடுக்கிக் கொண்டே போனார். திடீரென்று பேச்சை நிறுத்தி, பாராட்டுப்பெறுகிறவரின் காதருகே கொஞ்சம குனிந்து ஏங்க உங்க பேரு என்ன?” என்று கேட்டதும் கூடியிருந்தவர்கள் சிரித்துவிட்டனர். இப்படிப்போலியாகப்பேசுகிறவர்களும் நடப்பவர்களும் தான் நாட்டில் அதிகம் உண்டு.

பெருந்தலைவர் காமராசர் தொண்டர்களை மதிக்கும் தூயவராகத் திகழ்ந்தார். இவருடன் வெளியூர் சுற்றுப் பயணம் செய்வதென்றால் கூட இருப்பவர்கள்அந்தந்தப் பகுதியிலுள்ள தொண்டர்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கார் ஊரைக் கடக்கும்போது ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் எப்படி இருக்கார் என்று கேட்பார். உடனே சொன்னால் சந்தோஷப்படுவார். சொல்லாவிட்டால் இது கூடத் தெரியலையா என்று கோபித்துக்கொள்வார். ஒரு முறை அவர் சிவகிரியில் தங்கியிருந்தார். வெளியே போலீஸ்காரர் யாரோ ஒருவரை விரட்டிக்கொண்டிருந்தார். அந்த நபர் கையெடுத்துக் கும்பிட்டு நான் உள்ளே போகவில்லை. ஓர் ஓரமாக நிற்கிறேன். தலைவரைப் பார்த்து விட்டுப் போய்விடுகிறேன்.” என்று கெஞ்சினார். அவரது ஏழ்மையான கோலத்தைக் கண்ட போலீஸ்காரர் நீயெல்லாம் இங்கே நிற்கவே கூடாது என்று விரட்டுகிறார். ஜன்னல் வழியாக இதைக் கவனித்து விட்ட பெருந்தலைவர் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். அந்த மனிதரை உற்றுப் பார்த்தார். முகத்தில் மலர்ச்சி, வேலு வாப்பா.. வா.. நல்லாயிருக்கியா.. என்று அழைத்தபடி அந்த மனிதரின் தோளில் கை போட்டு அறைக்குள் அழைத்துச்சென்றார். போலீஸ்காரர் திகைத்து நின்றார். அதை விடவும் அந்த மனிதருக்கு திகைப்பு அதிகமாயிருந்தது. பல ஆண்டுகளுக்கு முன் சிறைக்கொட்டடியில் ஒன்றாகக் இருந்ததை நினைவு கூர்ந்து, பெயரையும் நினைவில் வைத்து வாய் மணக்க வேலு வாஎன்று அழைத்தால் வியப்பு ஏற்படாமலிருக்குமா? அந்த மகிழ்ச்சியில் தனது வறுமை நிலையைக் கூட சொல்லாமல் அவர் விடை பெற்றுச் சென்று விட்டார். ஆனால் பெருந்தலைவர் மற்றவர்கள் மூலம் அவரது நிலையை விசாரித்து அறிந்து ஒருவரிடம் சொல்லி காவலாளி வேலையை வாங்கிக் கொடுத்தாராம்.

உயர்ந்தவர் என்பதால் தேவையில்லாமல் புகழ்வதும், எளியவர் என்பதால் இகழ்ந்து ஒதுக்காமலும் இருப்பவரே சிறந்த மனிதர் என்று புறநானூறு கூறுகிறது. அதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book