49

தேர்தல் என்றாலே சில தில்லுமுல்லுகள் நடக்கும் என்பார்கள். ஒரு கட்சிப்பிரமுகரிடம் உங்கள் கட்சி எந்தக் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறது என்று ஒருவர் கேட்டார். “அதை இப்போது சொல்ல மாட்டோம். தேர்தல் முடிந்த பிறகு தான் அறிவிப்போம்என்றாராம்அந்தப் பிரமுகர். எவ்வளவு சாமர்த்தியம் பாருங்கள், சிலரை பெரும்புள்ளி ஆக்குவதற்கு பலரின் கைகளில் கரும்புள்ளி வைப்பதே தேர்தல் என்றார் ஒருவர். தேர்தல் நேரத்தில் ஓட்டுப்போட இறந்து போனவர்கள் எல்லாம் எழுந்து வந்துவிடுவார்கள். ஆம் கள்ள ஓட்டுப்போடும் ஆசாமிகளின் கை வரிசை இது. எப்படியாவது தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்செய்யும் குளறுபடிகள் இவை.

தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் அதை மக்கள் தீர்ப்பாக ஏற்று மகிழ்ச்சி அடையும் மனோபாவம் எல்லோருக்கும் வராது. ஆனால் பெருந்தலைவர் காமராசர் இதற்குச் சிறந்த உதாரணமாகத்திகழ்ந்தார். 1967ல் பெருந்தலைவர் தேர்தலில் தோற்றபோது அவரது கதை இத்தோடு முடிந்து விட்டது என்று பலர் நினைத்தார்கள். ஆனால் அது பொய்த்துவிட்டது. குமரி மாட்டத்தில் தமிழர்களின் தந்தை என்று அனைவராலும் பாராட்டப்பட்ட நேசமணி அவர்கள் காலமானதையொட்டி நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. பெருந்தலைவர் காமராசர் போட்டியிட்டார். அகில இந்தியாவின் கவனத்தை ஈர்த்துக்கொண்டது அந்தத் தொகுதி. “இந்தத் தேர்தலில் யார் ஜெயித்தாலும் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் ஜெயிப்பார்கள். நிலைமை மதில்மேல் பூனையாக இருக்கிறது என்று பத்திரிகைக்காரர்கள் எழுதினார்கள். ஆனால் அப்பச்சி பாஸ், அப்பச்சி பாஸ் என்று குமரி மாவட்டத்து மக்கள் குதூகலிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் எண்ணம் ஈடேறியது. வாக்குகள் முடிந்து ஓட்டு எண்ணப்படும் நாளில் ஆரம்பத்திலிருந்தே பெருந்தலைவர் முன்னிலையில் இருந்தார். பிற்பகலில் அவரது வெற்றி நிச்சயம் என்று தெரிந்ததும் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். தொண்டர்கள் எல்லோருக்கும் இனிப்புகள் வழங்க ஆரம்பித்தார்கள். வெடிகள் வெடித்தார்கள். வெற்றி ஆரவாரம் செய்தார்கள். பெருந்தலைவருக்கு மாலை அணிவிக்க அவரைத் தேடிச்சென்றனர். ஆனால் பெருந்தலைவர் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தார். ஐந்து மணிக்குத்தான் எழுந்திருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. மதிய உணவுக்குப்பின் உறங்குவது அவரது பழக்கம். ஓட்டு எண்ணப்படும் நாளில் கூட அவர் பதட்டமடையவில்லை. பரபரப்பு அடையவில்லை. கடமையைச்செய்து விட்டேன். பலனைப் பற்றிக் கவலையில்லை என்று கீதையின் நாயகனாய் அவர் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தார். ஆனால் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோற்றது. ஓட்டு எண்ணப்படும் நாளில் தொடர்ந்து வந்த தோல்விச்செய்தி தொண்டர்களைச் சோர்வடையச் செய்தது. பெருந்தலைவரோ பழைய தேர்தல்களில் நடந்த செய்திகளைத் தொண்டர்களுக்குச் சொல்லிச் சோர்வை அகற்றுகிறார். தோல்விச் சாயல் கொஞ்சம் கூட முகத்தில் இல்லாமல் எல்லோரையும் உற்சாகப்படுத்துகிறார். அந்த நேரத்தில் கூட கலகலப்பாகப் பேசி எல்லோருக்கும் தைரியம் சொல்லிக்கொண்டிருக்கும் அவரது ஆற்றலை எண்ணி எல்லோரும் மலைத்து நின்றார்கள். வெற்றியின் போது கொக்கரிக்காமலும் தோல்வியின்போது துவளாமலும் இருக்கின்ற மனநிலை மகான்களுக்கே வரும். “அற்றேமென்று அல்லற்படுபவோ செல்வம் பெற்றேமென்று ஓம்புதல் தேற்றாதவர்என்ற வள்ளுவர் வாக்கிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book