80

மாவீரன் அலெக்சாண்டரைப் பார்க்க வந்த அயல்நாட்டு விருந்தினர் ஒருவர், “பேரரசே! உங்கள் நகரிலுள்ள தோட்டங்களில் வீரமரணம் அடைந்த எண்ணற்ற வீரர்களின் சிலைகளை வைத்திருக்கிறீர்கள். தங்களின் சிலையை மட்டும் ஏன் வைக்கவிலலை?” என்று கேட்டார்.

அதற்கு அலெக்சாண்டர் என்னுடைய உருவச் சிலையை நான் இங்கு வைத்தால் எதிர்காலத்தில் என் பெயர் மறைந்துவிடும். இது யாருடைய சிலை என்று என் சிலையைப் பார்த்துக் கேட்பார்கள். அதைவிட என் சிலை வைக்கப்படாதிருந்தால் இவ்வளவு சிலைகள் இருக்கும்போது அலெக்சாண்டரின் சிலை மட்டும ஏன் இல்லை? என்று கேட்கட்டும். அதைத் தான் நான் விரும்புகிறேன்.” என்றார்.

இப்படித் தற்பெருமையோடு நடப்பவர்களால் தான் சில சமயம் சலசலப்புகள் ஏற்படும். தங்களை முன்னிறுத்திக் கொள்ள எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இல்லாவிட்டால் அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவார்கள். இந்த மாதிரியான வீண் பந்தாக்கள் எல்லாம் பெருந்தலைவரிடம் கிடையாது. அம்மாதிரி நடப்பவர்களையும கண்டிப்பார்.

திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழக கட்சிகள்வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காலம், எந்த நேரத்தில் கூட்டம் என்றாலும் பெரியார் குறிப்பிட்ட நேரத்தில் மேடையில்இருப்பார். ஆனால் கூட்டம் தொடங்கி ஒரு மணி நேரத்துக்குப் பிறகுதான் அண்ணா வருவார். அவரைப் பார்த்ததும் கூட்டத்தினர் அண்ணா வாழ்கஎன்று உரத்த குரலில் முழக்கமிடுவர். அந்த ஒலிக்கிடையே வந்து மேடையில் அமர்வார். இதனால் அவர் வரும் நேரத்தில் மேடையில் யார் முழங்கிக் கொண்டிருந்தாலும், தொடர்ந்து பேசமுடியாமல் போகும். சர்வக் கட்சிக் கூட்டமாக இருந்தால் அதில் பேசுகின்ற மற்ற கட்சித் தலைவர்களுக்கும் இந்த சோதனை நடக்கும்.

எந்தக் கூட்டமாக இருந்தாலும் நிறைவாக முத்தாய்ப்புப்பேச்சாளர் அண்ணா என்பதால் வீணாகச் சிலமணி நேரம் மேடையில் ஏன் கழிக்க வேண்டும்? என்று அவர் எண்ணியிருக்கலாம்.

ஆனால் அந்த அண்ணாவுக்கு இதுபோல் ஒரு சோதனை ஏற்பட்டது. திலகர் கட்டிடத்தில் 1960ஆம் ஆண்டு ஒரு கூட்டம் நடந்தது. அதில் அண்ணா உரையற்றிக்கொண்டிருந்த போது திரு.எம்.ஜி.ஆர். வந்தார். உடனே அவரைக் கண்ட கூட்டத்தினர் ஆரவாரக் குரல் எழுப்ப அண்ணாவாலேயே சில நொடிகள்பேச முடியாத நிலை ஏற்பட்டது.

இதே போன்ற சோதனை பெருந்தலைவருக்கு ஏற்பட்டபோது அதை சாமர்த்தியமாகச் சமாளித்தார். 1964ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கட்சி இந்திய தேசியக் காங்கிரசோடு இணைந்த கூட்டம் நடந்தது. அதில் இனிமையாகப் பேசக் கூடியவர் திரு..வி.கே சம்பத். மென்மையான சொற்களால் வன்மையாகப் பேசக் கூடியவர் கண்ணதாசன்.

திருச்சியில் இரு கட்சி இணைப்புக்கும் பின் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் மாலை நேரப் பொதுக்கூட்டம். பலர்பேசிய பின் காமராசர் பேசிக் கொண்டிருந்தார். நாட்டு நடப்பு, மக்கள் நிலை பற்றி ஆழமாகவும், அழுத்தமாகவும் உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கைதட்டல் வந்த இடத்தை தலைவர் கூர்ந்து பார்த்தார்.

அங்கே வந்து கொண்டிருந்தவர் கவியரசர் கண்ணதாசன். அவரைப் பார்த்து விட்ட தலைவர் யாரு? கண்ணதாசனா? ஏ கிறுக்கா அப்படியே உட்காருஎன்று ஒலி பெருக்கியிலேயே ஒரு போடு போட்டார். கண்ணதாசனும் அப்படியே தரையில் அமர்ந்தார்.

தவைர் உரை தொடர்ந்து நடந்து முடிந்தது. அதன் பின்னர் கண்ணதாசன் என்ற எரிமலை முழங்கிட கூட்டம் நிறைவு பெற்றது.

தலைவர் தன்னைக் கிறுக்காஎன்று சொல்லி வாழ்த்த மாட்டாரா என்று ஏங்கியவர்கள் பலர் உண்டு. ஏனெனில்தலைவர் தனது இதயபூர்வமான அன்பை அந்தச்சொல் மூலமே வெளிப்படுத்துவார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book