95

ஒரு முறை ஒரு அரசன் கிராமம் வழியாக வந்து கொண்டிருந்தான்.அப்போது வழியில் தள்ளாடும் கிழவன் ஒருவன் ஒருமரக்கன்றினை நட்டுக்கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்த அரசன் என்ன கிழவரே காடு வா வா என்கிறது. வீடு போ போ என்கிறது. இந்த நிலையில் மரம் நட்டு அது பயனளிக்கும் வரையில் உயிரோடு இருப்பீர்களா?” என்று கேட்டான்.

அதற்கு கிழவன் அரசே என் முன்னோர்கள் நான் பயன்பெறுவதற்காக இந்த மரங்களை நட்டுச்சென்றுள்ளார்கள். அதே போல நானும் என் பின்னால் வருபவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதால் இந்தக் கன்றை நடுகிறேன்என்றார்.

இது போன்ற உயர்ந்த குணம் உடையவர்களால் தான் நாடு வளமுடனும், நலமுடனும் திகழ முடியும், அப்படிப்பட்ட குணமுடையவர் நம் பெருந்தலைவர்.

எளிமை

பெருந்தலைவர் காமராசர் காங்கிரஸ் காரியக் கமிட்டித்தலைவராக இருந்த போது ஜெய்ப்பூரிலே ஒரு மாநாடு நடந்தது. அங்கே உள்ள மக்களில் பெரும்பாலோருக்கு இந்திதான் தெரியும். கூட்டத்திலே ஆங்கிலத்திலே பேசினவர்களை எல்லாம் மக்கள் பைட்டோ பைட்டோ இந்தி மே போலேன்னு கத்தினாங்க. அதாவது இந்தியிலே பேசு இல்ல உட்காருன்னுஅர்த்தம்.

பெருந்தலைவர் மனதுக்குள் சங்கடப்பட்டார். அவருக்குத் தமிழைத் தவிர ஆங்கிலம் கூட சரியாக வராத நிலை. வேறு வழியில்லாமல் சுருக்கமாக இரண்டொரு வார்த்தை பேசி விட்டு அமர்ந்தார். ஆனால் மக்கள் இன்னும் பேசுங்க தமிழிலேயே பேசுங்க பரவாயில்லைன்னு கத்தினார்கள் பெருந்தலைவருக்கு குழப்பமாகி விட்டது.

கூட்டத்திலே ஒருத்தர் மக்களிடம் அதென்ன அவர் மட்டும் பேசலாம்னு சொல்றீங்க என்று கேட்டார். அதற்கு அந்த மக்கள் காமராசர் எங்களை மாதிரி ரொம்ப எளிமையா தெரியறாரு. அவரினால் எங்களுக்கு நன்மை கிடைக்கும். அவர் எங்கள் கறுப்புக் காந்திஎன்று புகழ்ந்தார்கள். காமராசரின் எளிமை மொழி தெரியாத ஊரிலும் மரியாதையைக் கொடுத்தது.

நேர்மை

காமராசர் முதலமைச்சராக இருந்த நேரம். ராஜாஜி எதிரணியில் இருக்கிறார். மாம்பலம் சி..டி.நகரத்தில் ராஜாஜி சேவா சங்கம் என்ற அமைப்பைச் சார்ந்த கட்டிடம் கட்டியிருந்தார்கள்.

ஆனால் சி..டி.நிறுவனத்தினர் அந்தக் கட்டிடம் தங்களோட விதிமுறைகளுக்கு முரணாக கட்டப்பட்டதாகக் கூறி அந்தக் கட்டிடத்தை இடித்து விட்டார்கள். இந்த விஷயம் பெருந்தலைவருக்குத் தெரிய வந்தது. ராஜாஜி எதிரணி என்பதால் பெருந்தலைவர் இதைக் கண்டு கொள்ள மாட்டார் என்று எல்லோரும நினைத்தார்கள். ஆனால் பெருந்தலைவர் சி..டி. நிறுவனத்தினரை அழைத்து விசாரித்து அவர்கள் அதிகார துஷ்பிரயோகம் பண்ணியிருப்பதைக் கண்டுபிடித்து அவர்கள்செலவிலேயே உடனடியாக அந்தக் கட்டிடத்தைப் புதிதாகக் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று அறிக்கையோடு உத்திரவு பிறப்பித்தார். அதே போலவே சி..டி.நிறுவனத்தினர் புதிய கட்டிடத்தைக் கட்டிக்கொடுத்தனர். இப்போதும் அந்தக் கட்டிடம் மாம்பலம் சி..டி.நகரில் இருக்கிறது. பெருந்தலைவரின் பெருந்தன்மைக்கு இதுவும் ஒரு சான்றாகும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book