98

மனிதன் தன் சக்தியால் வாழவில்லை. கடவுள் பக்தியால் வாழ்கிறான். மனித முயற்சிகள் லட்சியங்கள் வெற்றிபெறக் கடவுள் அருள வேண்டும். கடவுள் அருள் பயிருக்கு நீர்போல குஞ்சுக்கு தாயின் கருணை போல அமைகிறது.

பெருந்தலைவர் காமராசருக்குக் கடவுள் பக்தி உண்டா? அவர் கோயிலுக்குச் செல்வாரா? சமய நூல்களைக் கற்பாரா? முதலிய கேள்விகளுக்கு விடை கண்டால் அவருடைய கடவுள் பக்தி பற்றிய தெளிவு கிடைக்கும்.

கடவுள் பக்தி வெறும் வெளிவேடத்தால் அறியப்படுவதல்ல. பல சிறந்த பக்தர்கள் சமயச் சின்னங்களைத் தரித்துக் கொள்வதில்லை. காமராசர் சமயச் சின்னங்களைப் பிறர் காணுமாறு பிற்காலத்தில் அணிவதில்லை. எனவே அவர் கடவுள் பக்தி பற்றிய கேள்வி எழுந்தது. அவர் வரலாற்றை முழுமையாகப் பார்த்தால் அவர் கடவுள் பக்தி பற்றிய பல சான்றுகளைக் காணலாம்.

காமராசர் விருதுநகர்தெப்பக்குளம் மாரியம்மனின் பக்தராக மிக இளமையிலேயே பக்குவப் பட்டிருந்தார். அந்தக் கோவில் யானை மதம் பிடித்த போது அதை அவர் அடக்கிய வரலாறு எல்லோருக்கும் தெரிந்ததுதானே?

முதல் முதலில் தேர்தலில் அவர் வெற்றி பெற்றபோது ஒரு ஊர்வலம் நடத்தப்பட்டது. அதில் பேசிய காமராசர் எனக்குக் கர்வம் வந்துவிடாமல் இருக்க அருள்புரியுமாறு கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள் என்று மக்களை வேண்டிக்கொண்டார்.

காமராசர் திருக்கோவில் தொண்டர் குழாத்தில் ஒருவராகத் திகழ்ந்தார். கோவில் கொடைவிழாவின்போது ஒரு ஹரிஜன் கோயிலுக்குள் வரக்கூடாது என்று தடுக்கப்பட்டபோது தடைகளை மீறி அவரைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்று வழிபாடு செய்தார்.

இளமையில் அவர் கல்வி பயின்ற சத்திரிய வித்யாலயா பள்ளியின் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்பார்; பக்திப் பாடல்கள் பாடுவார்.

பயணங்களின்போது அவர் எடுத்துச்செல்லும் நூல்களில் கம்பராமாயணம் ஒன்று. இராமன்மேல் உள்ள பக்தியால் அதைத் தொடர்ந்து படித்து வந்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தபோது கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். நண்பர்களையெல்லாம் கடற்கரைக்கு அனுப்பிவிட்டு பகவதி கோவிலுக்குச் சென்று உட்கார்ந்திருப்பவர் வரிசையில் அமர்ந்து வழிபாடு செய்தார் என்று விஜய கரிசல்குளம் திரு..சுப்பிரமணியன் எழுதியுள்ளார். (மகாஜனம் 13-1-1997)

குற்றாலத்தில தங்கியிருந்தபோது தினமும்மாலையில் அய்யா வைகுண்டசாமியின் வரலாற்றுக் காவியமான அகிலத்திரட்டு நூலினை ஓர் அன்பரை வாசிக்கச்சொல்லி முழுமையாகக்கேட்டார் என்று கூறினார். . கணபதி ராமன் (பாளையங்கோட்டை) ஒரு பேட்டியில் புலவர் பச்சைமாலிடம் கூறினார். சத்திய மூர்த்தி குடும்பத்தைத் திருப்பதிக்கு அழைத்துச் சென்றபோது தாமும் மொட்டை போட்டுத் திரும்பினார்.

இப்படிக் காமராசர் பக்தி பற்றிய எவ்வளவோ செய்திகள் உள்ளன. சுருக்கமாக இங்கே கூறப்பட்டுள்ளது.

விருதுநகர் காமாட்சி அம்மன் காமராசரின் குலதெய்வம். அந்த காமாட்சி பெயரையே அவருக்கு இட்டார்கள். காமாட்சி என்ற அம்மன்பெயரும், ராஜா என்ற செல்லப்பெயரும் சேர்ந்துதான் காமராஜ் என்ற பெயர் உருவாயிற்று என்பது வரலாறு.

இந்த காமராஜ் சமய சமரசக்கொள்கை உடையவர். ஆர்ப்பாட்டம் இல்லாத ஆன்மீகவாதி. எல்லா சமயங்களின்மேலும் மரியாதை உள்ளவர். சமயத் தலைவர்கள்மேல் பற்று உள்ளவர். திருமுருக. கிருபானந்த வாரியார்., யோகி சுந்தானந்த பாரதி, தவத்திரு குன்றக்குடி அடிகளார் காஞ்சி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்போன்ற சமயப்பெரியோர்களால் மிகவும் போற்றப்பட்டவர் என்பதைக் காமராசர் வரலாறு உணர்த்துகிறது.

பக்தி என்பது உள்ளத்தின் கீதம். இலட்சிய போதம். பிறர் பார்க்கும் படி வழிபாடு செய்யக்கூடாது என்பது இயேசுநாதர்கோட்பாடு. இறைவனோடு மனிதன் நேரடித் தொடர்புகொள்வதே சிறந்த வழிபாடு. காமராசர் இதில் தேர்ந்தவர். காமராசரின் உறுதிக்கும் இலட்சியங்களுக்கும் அசையாத கடவுள் பக்தியே ஆதாரம். குன்றாத பக்தியால் அந்த தேசியத்தலைவர் குன்றம் போல் வாழ்ந்தார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book